சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 65-வது படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு மறுநாளே ஜார்ஜியாவுக்கு பறந்தார் நடிகர் விஜய்.

பெரும்பகுதி படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்த படக்குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எதிர்பாராத சிக்கலால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. ஜார்ஜியாவில் தற்போது கடும் குளிர் மற்றும் அதிக மழை பெய்து வருகிறதாம். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. 15 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு சென்னை திரும்ப படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது மேலும் சில தினங்கள் ஆகும் என்ற நிலை உருவாகி உள்ளது. மழை நின்ற பின்னர்தான் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துதான் படக்குழுவினர் திரும்புவார்கள் என்று தெரிய வந்துள்ளது. படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக திட்டமிட்டபடி படம் திரைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.