சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எனது கணவர் சுந்தர்.சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார் என்று நடிகை குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இதில் அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சுந்தர்.சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நண்பர்களே உங்கள் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. எனது கணவர் சுந்தர்.சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
ஆனாலும் அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமையில் இருப்பார். அவர் எங்களின் இல்லத்தில் தங்குவார். 7 நாட்களுக்கு பிறகுதான் நான் அவரை பார்க்க முடியும். அனைவரின் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளராக களம் இறங்கிய குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் சுந்தர்.சி பிரசாரம் செய்த நிலையில் கொரோனா தொற்றில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.